கமல் தன்னுடைய கட்சியின் தொடக்க நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கைகளை அறிவிப்பார் என்று காத்திருந்த எல்லோருமே ஏமாந்துபோனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். தான், ஒரு இடதுசாரியா? வலதுசாரியா? என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நான், இரண்டுக்கும் 'மய்ய' த்தில் இருக்கிறேன் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
நீங்க நல்லவரா? இல்ல கெட்டவரா? என்று கேட்டால், தெரியலையேப்பா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ' இரண்டுக்கும் நடுவானவன் ' என்று சொல்லும்போது எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?
இடதுசாரிகளின் கொள்கைகள் எவை? வலதுசாரிகள் யார்? இவர்களில் யார் நல்லவர்கள்?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்சில் தொடங்குகின்றன. 1789 முதல் 1799 ஆம் ஆண்டுகளில் நடந்த ஃபிரெஞ்சுப் புரட்சியின்போது, அந்நாட்டின் அரசவையில் (இந்தியாவின் பாராளுமன்றம் போன்றது), முடியாட்சியின் பெயரிலான முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஆதரித்தவர்கள் வலதுபக்க இருக்கைகளிலும், குடியரசின் மக்கள் அதிகாரத்தை ஆதரித்தவர்கள், இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்திருந்தனர். இடது வலது என்ற சொல்லாடல் இப்படித்தான் ஆரம்பித்தது.
கார்ல் மார்க்சும், ஃபிரெடெரிக் ஏங்கெல்சும் 1848ஆம் ஆண்டு வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உலகையே அதிரச்செய்தது. இடதுசாரிகளின் முற்போக்குச் சிந்தனை வளர்ச்சியின் முழுமையான இறுதி வடிவமாக கம்யூனிசம் எழுந்தது. பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை அல்ல. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரமே இடதுசாரிகளின் இலக்கு.
மறுபக்கம், வலதுசாரிகள் நீண்ட பாரம்பரியம் கொண்டவர்கள். அவர்கள், மன்னர்களாக, பிரபுக்களாக, பெரும் பணக்காரர்களாக அறியப்பட்டார்கள். மக்கள் சிந்திக்கத் தொடங்கியபோது, கடவுளர்களையும், மறுபிறவிக் கொள்கைகளையும், மதங்களையும், குருமார்களையும் உருவாக்கினார்கள். மதங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோது, இறுதியாக, மக்களாட்சி என்ற சாக்லேட்டையும் கண்டுபிடித்தார்கள்.
வரலாறு இப்படி இருக்கும்போது, இவ்விரண்டு கொள்கைகளுக்கும் பொதுவாக ஒரு மனிதன் வாழவே முடியாது. எப்படி ஆள முடியும்?
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் விமர்சகர்களும் நியாயவாதிகள் என்று சொல்வதற்கில்லை. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது, அவரிடம் யாரும், நீங்கள் இடதா? வலதா? என்று கேட்கவில்லை.
நம்மக்களும் கொள்கைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் கொள்கைதான் முக்கியம் என்றால், தோழர் நல்லக்கண்ணுவோ, சீமானோ, திருமாவளவனோ இந்நேரம் முதல்வராகியிருக்க வேண்டும். எனவே, கொள்கை என்பதே அவசியமில்லை என்று கமல் நினைத்திருப்பாரேயானால், தமிழர்கள் இன்னும் கொஞ்ச காலத்திற்கு வெட்கப்பட்டே ஆகவேண்டும்.
வாழிய வாழியவே!
கருத்துகள்
கருத்துரையிடுக