கேவலம்.....
மனிதக் கூட்டம் நாங்கள்.
பகுத்தறிவுச் சுமையோடு
பணத்தைத் தேடி அலைகிறோம்.
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம்.
வேடிக்கை பார்க்கும்
வேடிக்கைக் கூட்டம் நாங்கள்.
ஆடைகள் களைத்து
வீடியோ எடுப்போம்.
இரத்தச் சகதியில் நின்று
செல்ஃபி எடுப்போம்.
எங்கள் வீட்டுக் கூரையில்
தீப்பற்றும் வரை காத்திருப்போம்.
நெஞ்சழுத்தக் காரர் நாங்கள்.
வெறும் பொருளுக்காய்...
பாவங்கள் செய்தோம்.
பழியைத் தூக்கி
பரம்பொருள்மேல் போட்டோம்.
அதிகாரப் பேய்கள்
ஆட்டம் போட்டாலும்
அமைதியாய் இருக்கப்
பழகியவர் நாங்கள்.
மரத்துப்போன உள்ளங்களோடும்
மரித்துப்போன இதயங்களோடும்
உலவிக் கொண்டிருக்கும்
உளுத்துப்போன உடல்கள் நாங்கள்.
இதற்குமேல் அவமானப்பட
எங்களால் முடியாது.
தயவுசெய்து...
சிரிப்பதை நிறுத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக